வேப்பந்தட்டை அருகே, ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி - நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
வேப்பந்தட்டை அருகே நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவர், ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்தவர் ரங்கதுரை. இவருடைய மகன் கோபிநாத் (வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று கோபிநாத் ஊருக்கு அருகே உள்ள மணியார் ஏரியில் குளிக்க நண்பர்களுடன் சென்றார். ஏரியில் இறங்கி குளித்தபோது, மணல் அள்ளப்பட்ட ஆழமான பகுதிக்கு கோபிநாத் சென்றார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதைக்கண்ட அவருடைய நண்பர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து நீரில் மூழ்கிய கோபிநாத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story