அரியலூரில், கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி; 67 பேருக்கு தொற்று - பெரம்பலூரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,249 ஆக உயர்வு


அரியலூரில், கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி; 67 பேருக்கு தொற்று - பெரம்பலூரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,249 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 Aug 2020 3:15 AM IST (Updated: 29 Aug 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,249 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,240 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இதில் குணம் அடைந்த 1,084 பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 139 பேர் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி பகுதியை சேர்ந்த 2 பேர், கிராமிய பகுதிகளான வி.களத்தூர், தொண்டப்பாடி, பிம்பலூர், எறையூர், அரசலூர், பாடாலூர் மற்றும் போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெரம்பலூர், அரியலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,249 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர், திருமானூர், செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்டவர்கள் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,519 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 1,698 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மொத்தம் 1,101 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story