ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு: சேலம் கலெக்டர் அலுவலகம் 2-வது முறையாக மூடப்பட்டது
ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் கலெக்டர் அலுவலகம் 2-வது முறையாக மூடப்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மட்டும் கொரோனாவுக்கு 126 பேர் பலியாகி உள்ளனர்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் கடந்த மாதம் கலெக்டர் அலுவலகம் 2 நாட்கள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து ஊழியர்கள் பலர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் மீண்டும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதால் நேற்று முதல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் கலெக்டர் அலுவலகத்தை மூடுவதற்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2-வது முறையாக நேற்று கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது. மேலும் அங்குள்ள அனைத்து துறைகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதனிடையே கலெக்டர் அலுவலகத்தில் வெளிப்புற நுழைவு வாயிலில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் முக்கியமான ஒரு சில அலுவலகங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. அங்கும் ஒரு சில ஊழியர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நுழைவு வாயில் கேட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் 3 நாட்களுக்கு விடுமுறை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
இதனிடையே கலெக்டர் அலுவலகம் எந்த ஒரு முன்னறிவிப்பும் வெளியிடப்படாமல் மூடப்பட்டதால், இதுபற்றி தெரியாமல் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பலர் அங்கு வந்தனர். அப்போது சிலர் பல்வேறு பணிகளுக்கு உள்ளே செல்ல வேண்டும் எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது. பின்னர் அவர்களிடம் போலீசார் எடுத்துக் கூறி அங்கிருந்து திருப்பி அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டதால் நிர்வாக பணிகள் முடங்கியது. நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் கலெக்டர் அலுவலகம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story