மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும் - பா.ம.க. இணைய வழி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. இணைய வழி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓமலூர்,
தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் அன்புமணியின் தம்பிகள், தங்கைகள் மற்றும் பொதுமக்கள் படை என்ற 3 அமைப்பை தொடங்கி, அந்த முப்படை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பா.ம.க. முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் இணைய வழியாக உரையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட பா.ம.க. மற்றும் அன்புமணியின் தம்பிகள், தங்கைகள், பொதுமக்கள் ஆகியோருடன் இணையவழி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் கண்ணையன், மாவட்ட செயலாளர் ராஜசேகர், தலைவர் டாக்டர் மாணிக்கம் ஆகியோர் வரவேற்றனர். மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாநில இணை செயலாளர் இசக்கி படையாச்சி, மாநில துணை பொதுச்செயலாளர் அருள், மாநில துணை தலைவர் கார்த்திக், மாநில துணை அமைப்பு செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இணையவழியாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். நிர்வாகிகள் அவரவர் வீட்டில் இருந்து இணையம் வழியாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கோனூர் கிராமத்தில் தொடங்கி, மேச்சேரி ஒன்றியம் வழியாக ஓமலூர் பகுதியில் சரபங்கா நதியுடன் இணைக்கப்பட்டு, பின் திருமணிமுத்தாறு, ஆத்தூர் வசிஷ்ட நதியுடன் இணைத்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும். ஏரிகளுக்கு நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கிராம புறங்களில் உள்ள சுகாதர நிலையங்கள் அனைத்தும் மேம்படுத்த வேண்டும். ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே குளிர்பதன கிடங்கு மற்றும் சென்ட் தொழிற்சாலை அமைக்கவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சி நிர்வாகிகள் அன்புமணியின் முப்படை அமைப்பின் நிர்வாகிகள் பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை இணையம் வழியாக பகிர்ந்து கொண்டனர். இதில் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் கலாசெல்வம், மாவட்ட தேர்தல் பணிகுழு தலைவர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் மணி, தொகுதி அமைப்பு செயலாளர் குமார், தொகுதி அமைப்பு தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், மாதேஷ், குமார், வெங்கடாஜலம், சந்திரசேகரன், விஜயகுமார், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story