வானூர் அருகே பழிக்கு பழியாக நள்ளிரவில் ரவுடி வெட்டிக்கொலை - 6 பேர் கைது


வானூர் அருகே பழிக்கு பழியாக நள்ளிரவில் ரவுடி வெட்டிக்கொலை - 6 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2020 4:15 AM IST (Updated: 29 Aug 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே நள்ளிரவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக நடந்த இந்த கொலையில் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வானூர், 

புதுவை தர்மாபுரியை அடுத்த கல்மேடு பேட் பகுதியை சேர்ந்தவர் கோபால்தாஸ் (வயது 48). பிரபல ரவுடி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் புதுவையில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி ஜெயந்தி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை இந்திரா நகரில் உள்ளனர். தற்போது ஜெயந்தி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள்கள் உறவினரின் பராமரிப்பில் உள்ளனர்.

பூத்துறையில் உள்ள மகள்களை கோபால்தாஸ் அடிக்கடி பார்க்க செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு பூத்துறை சென்ற அவர், அங்கு சாப்பிட்டு விட்டு வீட்டின் எதிரே புதிதாக கட்டிவரும் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கோபால்தாஸ் இறந்துபோனார்.

இது பற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், வானூர் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து ஊசுட்டேரி நோக்கி சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து கோபால்தாஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கோபால்தாஸ் மீது புதுச்சேரியில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் வில்லியனூர் பத்துக்கண்ணு பகுதியை சேர்ந்த ரவுடி மாயவன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கோபால்தாஸ் உள்ளார்.

இந்த கொலைக்கு பழிக்கு பழியாக கோபால்தாஸ் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கூடப்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய் (22), விக்னேஷ்குமார் (21), அய்யனார் (20), வசந்தகுமார் (21), நவீன் (20), அரியாங்குப்பம் வினோத்குமார் (21) ஆகிய 6 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை நேற்று போலீசார் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கூடப்பாக்கத்தை சேர்ந்த மாயவன் என்பவரின் மனைவிக்கும், கோபால்தாசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை மாயவன் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை கோபால்தாஸ் கொலை செய்தார். இந்த சம்பவம் 2017-ம் ஆண்டு நடந்தது.

இந்த கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் வகையில், மாயவனின் உறவினரான சஞ்சய், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோபால்தாசை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சஞ்சய் உள்பட 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நள்ளிரவில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூத்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story