வேலூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Aug 2020 3:45 AM IST (Updated: 29 Aug 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தி அதில் கொரோனா அறிகுறி இருப்பவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது.

தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 80 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டை பகுதியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து விடுதியில் தங்கியிருக்கும் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.

Next Story