பேரணாம்பட்டு அருகே, குடும்ப தகராறில் புதுப்பெண் அடித்துக்கொலை - கணவர் கைது


பேரணாம்பட்டு அருகே, குடும்ப தகராறில் புதுப்பெண் அடித்துக்கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2020 4:30 AM IST (Updated: 29 Aug 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் யுவராஜ் (வயது 22). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் இவரது தாய் மாமா மகள் சுப்புலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண்ணான சுப்புலட்சுமி கணவர் வீட்டில் அதிகமான வீட்டு வேலைகள் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை யுவராஜ் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்து மாலை 6.45 மணியளவில் பசியோடு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி சுப்புலட்சுமி அடுப்பில் தண்ணீர் சுடவைத்துக் கொண்டிருந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி கணவனை அடித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பசியோடு வீட்டுக்குள் வந்த கணவர் யுவராஜுக்கு, மனைவி தன்னை அடித்ததால் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அங்கிருந்த ஊதுகுழலை எடுத்து சுப்புலட்சுமியின் தலை, நெற்றியில் சரமாரியாக தாக்கினார். இதில் சுப்புலட்சுமி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சுப்புலட்சுமி இறந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமியின் தந்தை ராமமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story