‘நீட்’தேர்வை தள்ளி வைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வை தள்ளிவைக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
திருவண்ணாமலை,
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர முடியும். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் தேர்வு எழுத செல்வோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அதனை தள்ளி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதனை தள்ளிவைக்கக்கோரி திருவண்ணாமலை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அண்ணாச்சி முன்னிலை வகித்தார். பொருளாளர் சண்முகம், ஊடகப் பிரிவு மாநில பொது செயலாளர் காமராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கொரோனா காலத்தில் ‘நீட்’ தேர்வை நடத்தக்கூடாது. எனவே தேர்வை தள்ளி வைக்க வேண்டும்” என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கல்லூரி மாணவிகளும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மூத்த தலைவர் டாக்டர் மணி நன்றி கூறினார்.
சேத்துப்பட்டில் வந்தவாசி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டகாங்கிரஸ் கட்சி தலைவர் வி.பி. அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் தசரதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஜாபர்அலி வரவேற்றார். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story