மாவட்ட செய்திகள்

ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: மனைவி, மகளின் காதலன் கைது - பரபரப்பு வாக்குமூலம் + "||" + Workshop owner suicide case: Wife, daughter's boyfriend arrested - Sensational confession

ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: மனைவி, மகளின் காதலன் கைது - பரபரப்பு வாக்குமூலம்

ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: மனைவி, மகளின் காதலன் கைது - பரபரப்பு வாக்குமூலம்
திருப்பூரில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மனைவி கனகவள்ளி, மகளின் காதலன் கைது செய்யப்பட்டனர். கனகவள்ளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவருடைய மனைவி கனகவள்ளி (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர். திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் ரவி ஆட்டோ ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி மதியம் ரவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய செல்போனில் மரண வாக்குமூலமாக பேசி பதிவு செய்த வீடியோவை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் கனகவள்ளியும், மகளின் காதலன் அருண்குமாரும் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கனகவள்ளி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் ஒட்டன்சத்திரம். பிறந்து வளர்ந்தது எல்லாம் திருப்பூர்தான். எனக்கும் எனது கணவர் ரவிக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நான் வீட்டின் அருகிலேயே பேன்சி கடை மற்றும் அழகு சாதன நிலையம் நடத்தி வந்தேன். போதுமான வருமானம் இல்லாததால் கடையை காலி செய்து விட்டு, வீட்டிலேயே பிளவுஸ் தைத்து வந்தேன். எனக்கு செல்போன் மூலமாக எடப்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பழக்கம் ஆனார். அவருடன் நான் நெருக்கமாக பழகி வந்தேன். அது எனது மகளுக்கு தெரிந்து விட்டதால், கணவரிடம் அதை சொல்லி விடுவாள் என்ற பயத்தில், எனது தவறை மறைப்பதற்காக எனது மகள் அருண் என்ற அருண்குமாரை காதலிக்கும் விஷயத்தை எனது கணவரிடம் கூறி சமாளித்தேன். ஆனாலும் எனது மகள் நான் விக்னேசுடன் பழகும் விஷயத்தை என் கணவரிடம் கூறி விட்டாள்.

இதனால் அடிக்கடி எனக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் எனது மகளிடம் நீ காதலித்து வரும் அருண்குமாரை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன். இங்கு இருந்தால் உனது அப்பா அருண்குமாரை திருமணம் செய்து வைக்க மாட்டார் என்று கூறி எனது மகளை ஏமாற்றி, வீட்டை விட்டு வெளியேறி, ஈரோட்டிற்கு சென்றோம். இதனால் என்னையும், எனது மகளையும் காணவில்லை என்று கணவர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் ஈரோடு பெரியார்நகரில் உள்ள மகளிர் விடுதியில் இருந்ததை கண்டுபிடித்து எங்கள் இருவரையும் அழைத்து வந்தனர். அப்போது நாங்கள் போலீசாரிடம் எனது கணவருடன் செல்ல மறுத்து, எனது தாயார் வீட்டிற்கு செல்வதாக கூறினோம். இதற்கு எனது கணவரும் சம்மதித்தார். ஆனால் நாங்கள் அங்கு செல்லாமல் மீண்டும் ஈரோட்டிற்கு சென்று, அங்குள்ள மகளிர் விடுதியில் எனது மகளை சேர்த்து விட்டு, நான் மட்டும் எடப்பாடியில் உள்ள கள்ளக்காதலன் விக்னேஷ் வீட்டிற்கு சென்று அங்கு 6 நாட்கள் தங்கினேன். கடந்த 24-ந்தேதி திடீரென எனக்கு போன் செய்த எனது கணவர், எங்களை பார்ப்பதற்காக ஈரோட்டிற்கு வருவதாக கூறினார். உடனே நானும் விக்னேசும் வாடகை கார் மூலமாக ஈரோட்டில் எனது மகள் தங்கி இருந்த மகளிர் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

அதற்கு முன்பு விக்னேஷ் மூலமாக அறிமுகமான ஈரோடு சூரம்பட்டி வலசை சேர்ந்த எஸ்.எஸ்.எம். கார்மெண்ட்ஸ் கம்பெனி உரிமையாளர் மகேந்திரன், எனது மகள், அவளுடைய காதலன் அருண்குமார், அவருடைய அம்மா, கோழிக்கடைகாரர் முனீஸ்வரன் ஆகியோரும் நான் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டனர். அப்போது அங்கு வந்த எனது கணவரிடம் 4 பேரும் உன் மனைவியும், மகளும் உன்னுடன் வரப்போவதில்லை. இருவரும் எங்களுடன்தான் இருக்க போகிறார்கள் என்று கூறினார்கள். எனது கணவர் தன்னுடன் வருமாறு கெஞ்சி அழுதார். ஆனால் நாங்கள் வரமுடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டதால், அவர் அங்கிருந்து திருப்பூருக்கு வந்து விட்டார்.

அப்போது நானும், எனது மகளும் போனில் இன்னொரு திருமணம் செய்து கொள்ள போவதாக அவரிடம் கூறினேன். மேலும் அவர் நான் சாகப்போகிறேன் என்று கூறினார். அதற்கு நான் நீ செத்தால்தான் சந்தோஷம் என்று கூறிவிட்டேன். எனது கணவர் சாவுக்கு நாங்கள் அனைவரும் தான் காரணம் என்று வீடியோ பதிவு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக எனது மகன் என்னிடம் கூறினான். அதற்கு நான் நாங்கள் கூறியபடிதான் செத்து போயிட்டான். அவன் சாவுக்கெல்லாம் வரமுடியாது என்று கூறி அவனிடமும் இணைப்பை துண்டித்தேன்.

இந்த நிலையில் திருப்பூரில் என்ன நடக்கிறது என்ற பயத்தில் இன்று (நேற்று) மாலை 5 மணிக்கு நானும் எனது மகளின் காதலன் அருண்குமாரும் வாடகை கார் மூலமாக திருப்பூர் வந்து நெருப்பெரிச்சல் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த போலீசார் எங்கள் இருவரையும் கைது செய்தனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கனகவள்ளியுடன் மீட்கப்பட்ட 16 வயது மகளை, திருப்பூர் கோல்டன்நகரில் உள்ள அவருடைய பாட்டியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.