போதை பொருள், கஞ்சா விற்பனையில் தென் இந்தியாவின் தலைநகராக மாறுகிறதா பெங்களூரு?


போதை பொருள், கஞ்சா விற்பனையில் தென் இந்தியாவின் தலைநகராக மாறுகிறதா பெங்களூரு?
x
தினத்தந்தி 30 Aug 2020 3:44 AM IST (Updated: 30 Aug 2020 3:44 AM IST)
t-max-icont-min-icon

போதை பொருள், கஞ்சா விற்பனையில் தென்இந்தியாவின் தலைநகராக பெங்களூரு மாறுகிறதா? என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தின் தலைநகராக பெங்களூரு உள்ளது. இங்கு ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல பல்வேறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. மேலும் கல்வி நிறுவனங்களும் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் பெங்களூருவுக்கு தினமும் வேலை தேடி வருபவர்கள், படிப்புக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெங்களூரு நகரில் போதை பொருள், கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது.

முன்பு எல்லாம் போலீசாரிடம் கிராம் கணக்கில் தான் கஞ்சா பொட்டலங்கள் சிக்கும். அபூர்வமாக தான் அதிகளவில் கஞ்சா பொட்டலங்கள் சிக்கி வந்தன. இந்த நிலையில் சமீபகாலமாக பெங்களூருவில் அதிக மதிப்புடைய கஞ்சா, போதை பொருட்கள் சிக்கி வருகின்றன.

கடந்த 21-ந் தேதி பெங்களூரு கல்யாண்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையின் போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட எல்.எஸ்.டி. எனும் 180 போதை மாத்திரையும், 145 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து இருந்தனர்.

மேலும் இவர்கள் பெல்ஜியம், ஜெர்மனி நாடுகளில் இருந்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்து போதை மாத்திரைகளை வாங்கி விற்றதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கன்னட திரையுலகினரும் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய 204 கிலோ கஞ்சா சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதில் தொடர்புடைய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்கள் பெங்களூரு, ராமநகர், மைசூரு, சிக்பள்ளாப்பூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததும், கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பெருகி வரும் போதை பொருள், கஞ்சா விற்பனையால் தென்இந்தியாவின் தலைநகராக பெங்களூரு மாறுகிறதா? என்ற அச்சம் எழுந்து உள்ளது.

கன்னட திரையுலகினர் போதை மாத்திரையை பயன்படுத்துவதாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு குறித்து நடிகை ரச்சிதா ராம் கூறும்போது, எனக்கு போதை மாத்திரையை பயன்படுத்தும் பழக்கம் இல்லை. கன்னட திரையுலகில் யாராவது பயன்படுத்துகிறார்களா என்பது பற்றியும் எனக்கு தெரியாது. நமது உடல்நலத்தை நாம் கவனித்து கொள்ள வேண்டும் என்றார்.

இதுபோல கன்னட திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லிங்கேஷ் கூறும்போது, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் ரேவ் பார்ட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சில கன்னட இளம் நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். எனக்கு தெரிந்தவர்கள், கன்னட திரையுலகில் பிரபலமானவர்கள் என யாரும் போதை மாத்திரையை பயன்படுத்தவில்லை. இளம் நடிகர், நடிகைகள் போதை மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இதுகுறித்து தகுந்த விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, எனக்கு தெரிந்த தகவல்களையும் வழங்குவேன் என்றார்.

Next Story