மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட துணி வியாபாரியின் மகன் மீட்பு வாலிபர் சுட்டுப்பிடிப்பு; மேலும் 5 பேர் கைது + "||" + In Bangalore Abducted Redemption of cloth merchant son Waller shooting 5 more arrested

பெங்களூருவில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட துணி வியாபாரியின் மகன் மீட்பு வாலிபர் சுட்டுப்பிடிப்பு; மேலும் 5 பேர் கைது

பெங்களூருவில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட துணி வியாபாரியின் மகன் மீட்பு வாலிபர் சுட்டுப்பிடிப்பு; மேலும் 5 பேர் கைது
பெங்களூருவில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட துணி வியாபாரியின் மகனை போலீசார் மீட்டனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய வாலிபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,

பெங்களூரு பாரதிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக். இவர் துணி வியாபாரி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது சாதிக் மகன் தனது நண்பர்களுடன் வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தான். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் முகமது சாதிக்கின் மகனை காரில் கடத்தி கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.


இந்த நிலையில் விளையாட சென்ற மகன் நீண்ட நேரம் ஆனபோதிலும் வீட்டிற்கு வராததால் அவனை முகமது சாதிக் தேடிப்பார்த்தார். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இதனால் தனது மகன் குறித்து அக்கம்பக்கத்திலும் அவர் விசாரித்தனர். ஆனால் சிறுவன் எங்கு சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை. இதனால் முகமது சாதிக்கும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதற்கிடையே முகமது சாதிக்கின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய மர்மநபர் உனது மகனை நாங்கள் தான் கடத்தி வைத்து உள்ளோம். அவனை உயிருடன் விட வேண்டும் என்றால் ரூ.2 கோடி தர வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து பாரதிநகர் போலீசில் முகமது சாதிக் புகார் அளித்தார். மேலும் சிறுவன் கடத்தப்பட்டது குறித்து அறிந்ததும் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, சிறுவன் கடத்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் சிறுவனை மீட்க 5 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் சிறுவன் கடத்தப்பட்டது குறித்து பாரதிநகர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் சிறுவனை கடத்தல்காரர்கள் துமகூருவுக்கு ஒரு காரில் கடத்தி செல்வதாக பாரதிநகர் இன்ஸ்பெக்டர் ஆனந்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து துமகூரு போலீசாருக்கும், பாரதிநகர் போலீசார் தகவல் கொடுத்து இருந்தார்கள். மேலும் பாரதிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசாரும் துமகூருவுக்கு ஜீப்பில் சென்றனர். இந்த நிலையில் பெங்களூரு-துமகூரு சாலையில் புறநகர் பகுதியில் கடத்தல்காரர்கள் சென்ற வாடகை காரை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் காரில் இருந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர். பின்னர் காரில் இருந்த 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெயர்கள் பாகிம், முஜாமில், சாகிம், பைஜான், கலீல், முகமது கான் என்பதும், காற்றாடி பட்டம் தருவதாக கூறி சிறுவனை அவர்கள் 6 பேரும் கடத்தியதும் தெரியவந்தது. மேலும் காரில் மயக்க நிலையில் இருந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர். இந்த நிலையில் கைதான முகமது கான் திடீரென போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

இதனால் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சரண் அடைந்து விடும்படி முகமது கானை எச்சரித்தார். ஆனாலும் முகமது கான் தொடர்ந்து ஓடினார். இதில் இன்ஸ்பெக்டர் ஆனந்த், முகமது கானின் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் முகமதுகானின் காலில் குண்டு பாய்ந்தது.

இதனால் முகமதுகான் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் குண்டு காயம் அடைந்த முகமது கானையும், அவர் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர்களும் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனை பெற்றோர் கட்டி தழுவி முத்தம் கொடுத்தனர். மேலும் முகமது சாதிக்கும், அவரது மனைவியும் போலீஸ்காரர்களுக்கும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்து கொண்டனர்.

ரூ.2 கோடி கேட்டு சிறுவனை கடத்திய கும்பலை சேர்ந்த வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கடத்தப்பட்ட 16 மணி நேரத்தில் அவனை தனிப்படை போலீசார் மீட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறப்பாக விசாரணை செய்து சிறுவனை மீட்ட தனிப்படை போலீசாரை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை