மாவட்ட செய்திகள்

காருக்குள் கடிதம் வீசிய பழ வியாபாரியிடம் பரிவு காட்டிய முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பூங்கொத்து வழங்கினார் + "||" + The First Minister took pity on the fruit seller who threw the letter into the car and handed him a bouquet

காருக்குள் கடிதம் வீசிய பழ வியாபாரியிடம் பரிவு காட்டிய முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பூங்கொத்து வழங்கினார்

காருக்குள் கடிதம் வீசிய பழ வியாபாரியிடம் பரிவு காட்டிய முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பூங்கொத்து வழங்கினார்
காருக்குள் கடிதம் வீசிய பழ வியாபாரியிடம் பரிவு காட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் அழைத்து பூங்கொத்து வழங்கினார்.
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள இடையர்எம்பேத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல். இவருடைய மகன் செல்வராஜ். இவர் நீடாமங்கலம் அண்ணாசிலை அருகே பழக்கடை நடத்தி வருகிறார். தஞ்சை, திருவாரூர், நாகையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருவாரூரில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் நீடாமங்கலம் வழியாக தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார்.


நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சரின் கார் அருகே சென்ற செல்வராஜ் ஒரு கடிதத்தை முதல்-அமைச்சரிடம் அளிக்க முயற்சி செய்தார். ஆனால் முதல்-அமைச்சரிடம் கடிதம் அளிக்க முடியவில்லை. இதையடுத்து கடிதம் முதல்-அமைச்சரிடம் சேர வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சரின் காருக்குள் கடிதத்தை செல்வராஜ் வீசி உள்ளார். இதை பார்த்த முதல்-அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் செல்வராஜிடம் காருக்குள் என்ன வீசுகிறாய்? என கேட்டு அவரை தாக்கி உள்ளனர். பின்னர் முதல்-அமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

பரிவு காட்டிய முதல்-அமைச்சர்

இந்த நிலையில் காரில் சென்றபோது முதல்-அமைச்சர், செல்வராஜ் வீசிய கடிதத்தை படித்துள்ளார். இதையடுத்து செல்வராஜை, தஞ்சைக்கு அழைத்து வருமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி பழ வியாபாரி செல்வராஜை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் உடனடியாக தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

தஞ்சையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செல்வராஜை சந்தித்து பரிவுடன் நலம் விசாரித்துள்ளார். பின்னர் அவரிடம், கடிதத்தை கையில் தான் கொடுக்க வேண்டும், வீசக்கூடாது என அறிவுறுத்தியதுடன் செல்வராஜை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் சார்பில், செல்வராஜுக்கு பூங்கொத்து வழங்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி

காருக்குள் கடிதம் வீசிய தன்னை முதல்-அமைச்சர் சத்தம் போடுவாரோ என்று பயந்து கொண்டே வந்த பழ வியாபாரி செல்வராஜ், தன்னை முதல்-அமைச்சர் பரிவுடன் விசாரித்து பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்ததால் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போனார். அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து அவர் சில நிமிடங்கள் கழித்தே மீண்டு வந்தார்.

முதல்-அமைச்சரின் காரில் வீசிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது குறித்து செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீண்டும் ஆட்சி பீடம்

முதல்-அமைச்சரின் அருகில் செல்ல முடியாததால் கடிதத்தை காருக்குள் வீசினேன். அந்த கடிதத்தில், ‘ஓம் நமசிவாய, ஓம் கன்னி மூலகணபதி பகவானே சரணம், ஓம்முருகா, ஓம்முருகா, ஓம் சமயபுரத்தாளே துணை, ஓம் சாமியே சரணம் அய்யப்பா. திருச்செந்தூரில் ஆட்சிபுரியும் தமிழ்க்கடவுளான முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. அவருக்கு பழனிசாமி என்ற பெயரும் உண்டு. அவர் பெயரை தங்களுக்கு வைத்ததால் தான் தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்து முதல்-அமைச்சர் ஆனீர்கள். மீண்டும் 5 ஆண்டு தமிழக ஆட்சி பீடத்தில் அமர்வீர்கள். இது சத்தியம்’ என எழுதி இருந்தேன்.

சித்தர் வழிபாடு

நான் சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவன். கொரடாச்சேரி செல்லூர் அருகில் திருகொள்ளம்பூர் இடைக்காட்டார் சித்தரை வழிபடுவேன். நீடாமங்கலம் முச்சந்தி அம்மன் அருள் பெற்றுதான் நான் முதல்-அமைச்சருக்கு கடிதம் கொடுத்தேன். வேறு எனக்கென்று உள்நோக்கமோ, கோரிக்கையோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

காருக்குள் கடிதம் வீசிய செல்வராஜிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிவு காட்டிய தகவல் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பறவையிடம் பரிவு காட்டிய டோனியின் மகள்
டோனியின் மகள் பறவையிடம் பரிவு காட்டிய சம்பவம் நிகழ்ந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை