கர்நாடகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக: மத்திய குழு நாளை பெங்களூரு வருகை மழை-வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார்கள்


கர்நாடகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக: மத்திய குழு நாளை பெங்களூரு வருகை மழை-வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார்கள்
x
தினத்தந்தி 30 Aug 2020 12:04 AM GMT (Updated: 30 Aug 2020 12:04 AM GMT)

கர்நாடகத்தில் மழை- வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை(திங்கட்கிழமை) பெங்களூரு வருகிறார்கள். அந்த குழுவினர் முதல்-மந்திரி எடியூரப்பாவையும் சந்தித்து பேச இருக்கிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குடகு, சிக்கமகளூரு, பெலகாவி, கதக், விஜயாப்புரா, பாகல்கோட்டை உள்பட 11 மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த 11 மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 20 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்திருப்பதுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக கர்நாடகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருவாய்த்துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கர்நாடக மழை பாதிப்பு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும், மந்திரிகள் பசவராஜ் பொம்மை, அசோக்கிடம் தகவல்களை கேட்டு பெற்றிருந்தார். அப்போது கர்நாடகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் கர்நாடகத்திற்கு முதற்கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் 2 மந்திரிகளும் வலியுறுத்தி இருந்தனர். மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் இழப்பு நிதியில் இருந்து கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி இருந்தது.

ஆனால் கர்நாடக அரசு கேட்டு கொண்டதன்படி மத்திய அரசு நிவாரண நிதி எதுவும் ஒதுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயாப்புரா, பாகல்கோட்டை உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் மழை-வெள்ள சேதங்களை முதல்-மந்திரி எடியூரப்பா, ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார். மேலும் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்படும் என்றும், இதற்காக பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச டெல்லி செல்ல இருப்பதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறி இருந்தார்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவும், சேத விவரங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் மத்திய குழுவினர் வருகைதர உள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி அசோக் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

“கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை மற்றும் மராட்டிய மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட அதிகப்படியான தண்ணீரால், குடகு உள்பட 11 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளன. வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக அரசு தேவையான நிதி உதவிகளை செய்துள்ளது. நிவாரணம் அளிக்கும்படி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் வருகிற 31-ந் தேதி(அதாவது நாளை) பெங்களூருவுக்கு வருகைதர உள்ளனர். மத்திய உள்துறை செயலாளர் பிரதாபன் தலைமையிலான குழுவினர் கர்நாடகத்திற்கு வருகை தந்து மழை-வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்கள். அந்த குழுவினர் 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பார்வையிடுகிறார்கள்.

மழை பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தி தகவல்களை கேட்க உள்ளனர். மேலும் விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பாதிப்புகள், சேதங்கள் குறித்து கேட்கிறார்கள். இறுதியில் பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

பின்னர் மத்திய குழுவினர் டெல்லிக்கு சென்று கர்நாடக மழை பாதிப்பு குறித்த தகவல்கள், சேத மதிப்பு குறித்து மத்திய உள்துறையிடம் அறிக்கை அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையின் படி கர்நாடகத்தில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்க உள்ளது. கர்நாடகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story