மராட்டியத்தில் திடீரென எகிறிய பாதிப்பு ஒரே நாளில் 16,867 பேருக்கு கொரோனா 328 பேர் பலி


மராட்டியத்தில் திடீரென எகிறிய பாதிப்பு ஒரே நாளில் 16,867 பேருக்கு கொரோனா 328 பேர் பலி
x
தினத்தந்தி 30 Aug 2020 12:39 AM GMT (Updated: 30 Aug 2020 12:39 AM GMT)

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 16 ஆயிரத்து 867 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 328 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இங்கு தினந்தோறும் நோய் பாதிப்பு புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 16 ஆயிரத்து 867 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழ் தான் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

திடீரென பாதிப்பு எகிறி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்வுகள் காரணமாக தொற்று பாதிப்பு மின்னல் வேகம் எடுத்து இருப்பதாக கருதப்படுகிறது.

இதேபோல மேலும் 328 பேர் மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 24 ஆயிரத்து 103 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் விகிதம் 3.15 ஆக உள்ளது.

மாநிலத்தில் மொத்தம் 7 லட்சத்து 64 ஆயிரத்து 281 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 711 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 11 ஆயிரத்து 541 பேர் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1 லட்சத்து 85 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் இதுவரை 40 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.05 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 13 லட்சத்து 12 ஆயிரத்து 59 போ் வீடுகளிலும், 35 ஆயிரத்து 524 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story