பாகூரில் துணிகரம் பூலோக மாரியம்மன் கோவிலில் கொள்ளை மர்ம ஆசாமிகள் உண்டியலை தூக்கிச்சென்றனர்


பாகூரில் துணிகரம் பூலோக மாரியம்மன் கோவிலில் கொள்ளை மர்ம ஆசாமிகள் உண்டியலை தூக்கிச்சென்றனர்
x
தினத்தந்தி 30 Aug 2020 2:01 AM GMT (Updated: 30 Aug 2020 2:01 AM GMT)

பாகூர் பூலோக மாரியம்மன் கோவில் உண்டியலை மர்மஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பாகூர்,

பாகூரின் மையப்பகுதியான மார்க்கெட் வீதியில் பிரசித்திபெற்ற பூலோக மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் தினமும் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த கோவில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அண்மையில் திறக்கப்பட்டு, வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவிலின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பினால் ஆன உண்டியலை மர்ம ஆசாமிகள் அடியோடு பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் மர்ம ஆசாமிகள் அங்குள்ள அரசு பள்ளி அருகே உள்ள மாவு அரவை நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடிச்சென்றனர்.

நேற்று காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக ஊழியர் வந்தபோது, உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டிதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் புகார் தெரிவித்ததன் பேரில் பாகூர் போலீசார், கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கோவிலில் மர்ம ஆசாமிகள் உண்டியலை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டும் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story