முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்


முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 30 Aug 2020 10:45 PM GMT (Updated: 30 Aug 2020 6:00 PM GMT)

முழு ஊரடங்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடியது.

தூத்துக்குடி,

தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதனால் பலர் திருமண நிகழ்ச்சிகளுக்கு இருசக்கர வாகனங்களில் சென்றனர். அதே போன்று வேன், கார்களிலும் பலர் திருமண வீடுகளுக்கு சென்றனர்.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 5 இடங்களில் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்தது. ஊரடங்கு காலத்தில் வெளியில் வந்தவர்களை மாநகராட்சி அதிகாரிகள் மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனைக் காக மாதிரிகள் சேகரித்தனர். நேற்று சுமார் 300 பேரின் மாதிரிகளை சேகரித்தனர்.

இந்த நிலையில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்படி தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் நடந்த வாகன தணிக்கையின் போது, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை போலீசார் மடக்கினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை கொடுத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இதேபோன்று குரூஸ்பர்னாந்து சிலை அருகிலும் ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், கழுகுமலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஜவுளிகடைகள், பலசரக்கு கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள், பாத்திரக்கடைகள், தெற்கு பஜாரில் உள்ள நகைக்கடைகள், புத்தகக்கடைகள் என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காந்தி மைதானம், புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகம் ஆகியவற்றில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த நாள் என்றாலும், தளர்வில்லா ஊரடங்கு காரணமாக திருமணங்கள் சம்பந்தப்பட்ட மணமகன் வீட்டிலேயே குறைந்தளவு உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதனால், சாலைகளில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் நடமாட்டம் இருந்தது. மேலும், திருமண முடித்த கையோடு மணமக்கள் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவில் வெளியே நின்று தரிசனம் செய்து சென்றனர். மேலும், இன்றும் (திங்கட்கிழமை) வளர்பிறை முகூர்த்தம் என்பதால் நேற்று முன்தினமே, திருமண நிகழ்ச்சிக்கு தேவையான வாழை இலைகள், வாழைத்தார்கள், காய்கறிகளை வாங்கி மண்டபங்களில் சேகரித்து வைத்திருந்தனர்.

ஏரலில் பால், மருந்து கடைகளை தவிற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் கலகலப்பாக இருக்கும் மெயின் பஜார், பஸ் நிலையம் மற்றும் காந்திசிலை பஸ் நிறுத்தம் பகுதிகளில் மக்கள் நட மாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.

இதேபோல் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட ஊர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

Next Story