பெங்களூருவில் இருந்து மராட்டிய மாநிலம்: சோலாப்பூருக்கு புதிய சரக்கு ரெயில் காணொலி காட்சி மூலம் எடியூரப்பா தொடங்கி வைத்தார்


பெங்களூருவில் இருந்து மராட்டிய மாநிலம்: சோலாப்பூருக்கு புதிய சரக்கு ரெயில் காணொலி காட்சி மூலம் எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Aug 2020 11:30 PM GMT (Updated: 30 Aug 2020 11:00 PM GMT)

பெங்களூருவில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாப்பூருக்கு புதிய சரக்கு ரெயிலை நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாப்பூருக்கு புதிய சரக்கு ரெயில் (ரோ-ரோ) தொடங்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, முதன் முறையாக பெங்களூரு புறநகர் நெலமங்களா ரெயில் நிலையத்தில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பாலே ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் நேற்று தொடங்கியது. இந்த புதிய ரெயிலின் தொடக்க நிகழ்ச்சி கிருஷ்ணா இல்லத்தில் நேற்று காலையில் நடைபெற்றது.

இதில், முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு காணொலி காட்சி மூலமாக பெங்களூரு-சோலாப்பூர் இடையிலான புதிய சரக்கு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி, மந்திரிகள் அசோக், ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு அருகே நெலமங்களாவில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாப்பூருக்கு புதிய சரக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நெலமங்களா அருகே ஏ.பி.எம்.சி, பீனியா உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. இந்த புதிய சரக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டு இருப்பதன் மூலம், அந்த தொழிற்பேட்டைகளில் இருந்து அனைத்து விதமான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

பல்வேறு விதமான சரக்குகளுடன், 42 லாரிகளும் சரக்கு ரெயிலில் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெலமங்களா மற்றும் பாலே ரெயில் நிலையங்களில் இந்த லாரிகள் ஏற்றி, இறக்கி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலை மார்க்கமாக லாரிகளை அனுப்பி வைப்பதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும். சரக்கு ரெயில் மூலமாக லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதன் மூலமாக மிக எளிமையாகவும், பாதுகாப்பான முறையிலும் சென்றடையும்.

இந்த சரக்கு ரெயிலில் 1,260 டன் எடை கொண்ட பொருட்களை அனுப்பி வைக்க முடியும். நெலமங்களா-சோலாப்பூர் இடையே 682 கிலோ மீட்டர் தூரம் இந்த சரக்கு ரெயில் பயணிக்க உள்ளது. இதுபோன்ற லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பெங்களூரு, அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், இந்த சரக்கு ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

இது விவசாயிகளுக்கு பயன்படும். தொழிற்சாலைகளுக்கும் உதவியாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். அவரது வழிகாட்டுதலின்படி புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு-சோலாப்பூர் இடையே புதிய சரக்கு ரெயில் சேவை தொடங்க அனுமதி அளித்த ரெயில்வே துறைக்கு கர்நாடக அரசு சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story