வீட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு நடந்து வந்த பெண்


வீட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு நடந்து வந்த பெண்
x
தினத்தந்தி 30 Aug 2020 11:41 PM GMT (Updated: 30 Aug 2020 11:41 PM GMT)

கொரோனா எனும் கொடிய நோய் பலரையும் பாடாய்படுத்தி வருகிறது. கொரோனாவால் வேலையிழந்த பலர் வேறு பிழைப்பை தேடி அலைந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் வீட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தால் சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு நடந்து வந்தார்.

கும்பகோணம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 62). 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றதால் வருமானம் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்த இவர் பிழைப்பு தேடி சென்னைக்கு சென்றார். சென்னை செங்குன்றம் பகுதியில் பல வீடுகளில் விஜயலட்சுமி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

அந்த பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் தங்கள் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்துக்கொள்ளுமாறு விஜயலட்சுமிக்கு அனுமதி வழங்கினர். மேலும் அவருக்கு மாத சம்பளமாக ரூ.6 ஆயிரம் வழங்கினர். இதனால் விஜயலட்சுமி அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார்.

கொரோனாவால் வேலை பறிபோனது

கொரோனா ஊரடங்கால் தம்பதியினருக்கு தற்போது போதிய வருமானம் இல்லாமல் போனது. மேலும் தங்கள் வீட்டில் வேலை செய்யும் விஜயலட்சுமிக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் வீட்டு வேலையில் இருந்து விஜயலட்சுமியை நீக்கி விட்டனர். கொரோனாவால் வேலை பறிபோனதால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி, வேறு பிழைப்பை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்தார். ஆனால் யாரும் அவருக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தவித்து வந்த விஜயலட்சுமி சொந்த ஊருக்கே சென்று பிழைக்கலாம் என முடிவு செய்தார். ஊரடங்கால் பொது போக்குவரத்து இல்லாத நிலையில் அவர் கடந்த 25-ந் தேதி சென்னை செங்குன்றத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி நடைபயணமாக புறப்பட்டார். பிழைப்பு தேடி மீண்டும் சொந்த ஊருக்கே புறப்பட்ட அவர் நேற்று கும்பகோணத்தை வந்தடைந்தார்.

250 கிலோ மீட்டர்

அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் வேதாரண்யத்துக்கு நடந்தே செல்ல ஆயத்தமான அவர் தனது பயணம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை செங்குன்றம் பகுதியில் வேலை பார்த்து வந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டதால் சொந்த ஊருக்கே செல்ல முடிவு செய்தேன். பஸ் போக்குவரத்து இல்லாததால் நடந்தே பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். தினமும் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து வருகிறேன்.

இதுவரை 250 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளேன். இன்னும் 100 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. வழியில் யாராவது உணவு வழங்கினால், அதை சாப்பிட்டு வருகிறேன். வேதாரண்யத்தில் எனது உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களை தேடி செல்கிறேன். அங்கு சென்று எனக்கென ஏதாவது ஒரு பிழைப்பை தேடிக்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story