காற்றில் பறந்த சமூக இடைவெளி மார்க்கெட், இறைச்சி கடைகளில் திரண்ட மக்கள்


காற்றில் பறந்த சமூக இடைவெளி மார்க்கெட், இறைச்சி கடைகளில் திரண்ட மக்கள்
x
தினத்தந்தி 31 Aug 2020 12:27 AM GMT (Updated: 31 Aug 2020 12:27 AM GMT)

புதுவையில் மார்க்கெட், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் திரண்டதால் அங்கு சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதுவையில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன், கோழிக்கறி, ஆட்டு இறைச்சியை வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற போலீசார், சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூடி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். புதுவையில் நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.780-க்கும், சிக்கன் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

புதுச்சேரி உப்பளம் சாலையில் இருந்து மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழி, சிமெண்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை பெண்கள் தரையில் கடை விரித்து மீன் வியாபாரம் செய்தனர். அங்கும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன்கள் வாங்கிச்சென்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

கொரோனா பாதித்த பகுதியில் இன்று முதல் ஒருவாரம் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குபேர் மார்க்கெட், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு மார்க்கெட் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் பொருட் கள் வாங்க மக்கள் அதிகம் திரண்டனர். அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை தோறும் சண்டே மார்க்கெட் நடைபெறும் காந்திவீதியில் கடைகள் திறக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் ஏராளமான வியாபாரிகள் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கடைகளை திறந்திருந்தனர். இங்கு பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பேரம் பேசி பொருட்களை வாங்கிச்சென்றனர்.

Next Story