திருவள்ளூர் அருகே மாஞ்சா நூல் காற்றாடி அறுந்து விழுந்து விமான நிலைய ஊழியர் காயம் - 3 பேர் கைது


திருவள்ளூர் அருகே மாஞ்சா நூல் காற்றாடி அறுந்து விழுந்து விமான நிலைய ஊழியர் காயம் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2020 6:37 AM IST (Updated: 31 Aug 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மாஞ்சா நூல் காற்றாடி அறுந்து விழுந்து கழுத்தில் சிக்கியதில் தனியார் விமான நிலைய ஊழியர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆவடி பைபாஸ் சாலையை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 39). இவர் சென்னை தனியார் விமான நிலையத்தில் தரைத்தள பொறியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சத்தியமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் மேம்பாலம் அருகே சென்ற போது, திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிக்குப்பம் சுந்தரம் தெருவை சேர்ந்த நாகராஜ் (32), ராஜருபேஷ் (19) பெரியகுப்பம் கம்பர் தெருவை சேர்ந்த தீனதயாளன் (29) ஆகிய 3 பேரும் தங்கள் வீட்டு மாடியில் விட்டுக்கொண்டிருந்த நிலையில், மாஞ்சா நூல் காற்றாடி அறுந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சத்தியமூர்த்தியின் கழுத்து மற்றும் கைகளில் மாஞ்சா நூல் காற்றாடி சுற்றியது. இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதையடுத்து, காற்றாடி விட்டு விபத்தை ஏற்படுத்தியதாக நாகராஜ், தீனதயாளன், ராஜருபேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 3 காற்றாடிகள், மாஞ்சா நூல்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story