தடையை மீறி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு: மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு பூட்டு - இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி


தடையை மீறி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு: மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு பூட்டு - இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 31 Aug 2020 6:46 AM IST (Updated: 31 Aug 2020 6:46 AM IST)
t-max-icont-min-icon

பட்டாபிராம் அருகே மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தை தடுத்து நிறுத்திய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலுக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி,

பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி கிராமத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. சுமார் 250 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோராஞ்சேரி கிராம மக்கள் 300 பேர், “நாங்கள் கோவிலுக்கு செல்ல மாட்டோம். கும்பாபிஷேகம் நடத்த அனுமதி தாருங்கள்” என கையெழுத்திட்டு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் நேற்று தடையை மீறி கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பொதுமக்கள் சார்பில் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அதற்காக நோட்டீஸ்களும் வினியோகம் செய்தனர்.

இந்தநிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் கதவை சாத்தி பூட்டு போட்டுவிட்டனர். இதனால் நேற்று நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகம் தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும் கோவிலில் தடையை மீறி கும்பாபிஷேகம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story