தளர்வில்லா முழு ஊரடங்கால் திருப்பூரில் வெறிச்சோடிய சாலைகள் கடைகள் அடைப்பு


தளர்வில்லா முழு ஊரடங்கால் திருப்பூரில் வெறிச்சோடிய சாலைகள் கடைகள் அடைப்பு
x

தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர்,

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் இந்த மாதத்தில் (ஆகஸ்டு) உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று இந்த மாதத்தின் 5-வது முழு ஊரடங்கு திருப்பூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவே அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்தனர்.

சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கையொட்டி திருப்பூர் மாநகர் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் என அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. மாநகர் பகுதிகளில் பொதுமக்களின் அவசர தேவைகளுக்காக மருந்தகங்கள் மட்டுமே செயல்பட்டன. இதுபோல் மாநகர் பகுதிகளில் பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலைய பாலம், டி.எம்.எப். பாலம், குமரன் ரோடு, மங்கலம் ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. போலீசாரும் ஆண்டிபாளையம் சோதனை சாவடி, புஷ்பா ஜங்சன், மாநகராட்சி சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வழக்கமாக விற்பனை அதிகமாக நடைபெறும் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதுபோல் காதர்பேட்டை பகுதிகளிலும் சில்லரை ஆடை விற்பனை கடைகள் பல அடைக்கப்பட்டிருந்தன. அனுப்பர்பாளையம், வீரபாண்டி உள்பட திருப்பூர் மாநகர் மட்டுமின்றி திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, தாராபுரம், உடுமலை, தளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story