திருவக்கரையில் வீடு புகுந்து வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.8 லட்சம் கொள்ளை


திருவக்கரையில் வீடு புகுந்து வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.8 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 31 Aug 2020 2:10 AM GMT (Updated: 31 Aug 2020 2:10 AM GMT)

திருவக்கரையில் நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.8 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரையை சேர்ந்தவர் பழனி (வயது 48). இவர் அதே பகுதியில் கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி குமுதா. இவர்களுக்கு விக்னேஷ் (20) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு பழனி குவாரியில் வேலை இருந்ததால் அங்கு சென்றுவிட்டார். குமுதா உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக மயிலத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார். வீட்டில் விக்னேஷ் மட்டும் அவரது அறையில் படுத்து தூங்கினார்.

நள்ளிரவு 2 மணியளவில் பழனியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர் உள்ளே புகுந்தனர். அவர்கள் 4 பேரும் தனித்தனியாக பிரிந்து சென்று வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து திறக்க முயன்றனர். அவர்களால் பீரோவை திறக்க முடியவில்லை.

ரூ.8 லட்சம் கொள்ளை

அப்போது வீட்டின் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த விக்னேசை முகமூடி கொள்ளையர்கள் தட்டி எழுப்பி பீரோ சாவியை கேட்டனர். அவர்களை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், பீரோல் சாவி இருக்கும் இடம் தனக்கு தெரியாது என கூறினார். உடனே முகமூடி கொள்ளையர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியை விக்னேஷ் கழுத்தில் வைத்து பீரோவின் சாவியை தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார்கள். உயிருக்கு பயந்த அவர், பீரோ சாவியை எடுத்து கொள்ளையர்களிடம் கொடுத்தார். சாவியை பெற்ற அவர்கள் பீரோவில் இருந்த ரூ.8 லட்சத்தையும், ஒரு மோதிரத்தையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பரபரப்பு

இதுகுறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை தொடர்பாக வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருவக்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story