மளிகை கடைக்காரரை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ


மளிகை கடைக்காரரை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 31 Aug 2020 2:21 AM GMT (Updated: 31 Aug 2020 2:21 AM GMT)

கடலூர் முதுநகரில் கடனுக்கு பொருட்கள் கேட்டு மளிகை கடைக்காரரை அரிவாளை காட்டி வாலிபர் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் பென்சனர் லைன் தெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற சந்தனமகாராஜா. இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வடிவேலு மகன் இமயன் (வயது 30) என்ற வாலிபர் வந்து கடனுக்கு பொருட்கள் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அவர் மறுத்ததால், அவரை இமயன் ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து ராஜா கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். ஆனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர். இதையடுத்து இமயன் அவ்வப்போது வந்து, ராஜாவிடம் கடனுக்கு மளிகை பொருட்கள்கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது.

வாலிபர் கைது

இந்த நிலையில் சம்பவத்தன்று இமயன் கையில் அரிவாளுடன் ராஜாவின் மளிகைக்கடைக்கு வந்து, கடனுக்கு மளிகை பொருட்கள் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் கடையில் இருந்தவர்கள் பொருட்கள் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், ராஜா மற்றும் கடையில் வேலை பார்த்த ஊழியர்களை அரிவாளை காட்டி மிரட்டி, அங்கிருந்த கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.

இந்த காட்சி ராஜா கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதை வைத்து ராஜா கடலூர் முதுநகர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் இமயன் கடையில் அரிவாளை காட்டி மிரட்டி, பொருட்களை சேதப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகியது. இதையடுத்து உஷாரான போலீசார், இமயன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இருப்பினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story