போளூர் அருகே பெண் தற்கொலையில் கணவர், மாமியார் கைது


போளூர் அருகே பெண் தற்கொலையில் கணவர், மாமியார் கைது
x
தினத்தந்தி 31 Aug 2020 12:07 PM IST (Updated: 31 Aug 2020 12:07 PM IST)
t-max-icont-min-icon

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவன், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

போளூர்,

போளூரை அடுத்த அத்திமூர் ஜம்பங்கிபுரத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் செல்வம் (வயது 27), பஞ்சாப் மாநிலத்தில் புரோஸ்பர் மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். வடக்காடு கிராமத்தை சேர்ந்த சுகுமூர்த்தி மகள் ஷில்பாவை காதலித்த இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் ஒரு மாத விடுமுறையில் பணிக்கு சென்ற அவர் சமீபத்தில் ஊருக்கு வந்தார். அப்போது செல்போனில் செல்வம் பெண் நண்பர்களுடன் பேசுவது ஷில்பாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

செத்துப்போ

அப்போது செல்வத்தின் தாயார் பஞ்சவர்ணமும், தங்கை திவ்யாவும் ஷில்பாவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு, செத்துப்போ என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ஷில்பா கடந்த 8-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி ஒரு ஆண்டு ஆவதால் ஆரணி சப்-கலெக்டர் மைதிலி விசாரணை மேற்கொண்டார்.

ஷில்பாவின் செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் நீ செத்துப்போனால் நான் மாலை எடுத்து வருவேன் என்று செல்வம் ‘வாட்ஸ்அப்‘பில் ‘வாய்ஸ் மெசேஜ்’ அனுப்பி இருந்தது தெரியவந்தது. மேலும் “நீ செத்துப்போனால் நான் வேறுபெண்ணை திருணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ முடியும் என்று அடிக்கடி கூறியதும் விசாரணையில் தெரியவந்தது.

சப்-கலெக்டர் மைதிலியின் விசாரணை அறிக்கையை அடுத்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் செல்வம் அவரது தாயார் பஞ்சவர்ணம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திவ்யாவை தேடி வருகின்றனர்.

Next Story