இன்று முதல் திறக்க அனுமதி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு


இன்று முதல் திறக்க அனுமதி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 31 Aug 2020 10:00 PM GMT (Updated: 31 Aug 2020 6:26 PM GMT)

இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் கோவில் களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் கோவில்கள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் சுகாதாரமான முறையில் அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து, சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முதற்கட்டமாக தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண வழி தரிசனத்திற்கு 6 அடி சமூக இடைவெளி கடைபிடித்து டோக்கன் முறையில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய கோவிலில் 13 இடங்களில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் நுழைவுவாயிலில் பக்தர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர். கோவிலின் பிரதான சன்னதிகளான மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர் சன்னதிகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தங்க ரதம், சண்முக அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்ய பூஜை பொருட்களை கோவிலுக்குள் கொண்டுவர தற்போது அனுமதி இல்லை. முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கடற்கரையில் நீராடுதல், நாழிக்கிணற்றில் தீர்த்தம் தெளித்தல் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்க தற்போது அனுமதி இல்லை. கோவில் மூலம் வழங்கப்படும் அன்னதானம் வழங்கப்படும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் டோல்கேட் அருகில் முடி காணிக்கை மண்டபத்திற்கு எதிரில் உள்ள இடத்திலும் மற்றும் வடக்கு டோல்கேட் அருகில் உள்ள கலை அரங்கிலும் அமரச்செய்து, அடையாள அட்டை விவரம் பெற்று டோக்கன் மற்றும் கட்டணச் சீட்டு வழங்கப்பட்டு, 25 நபர்களாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அனுமதிக்கப்படுவர்.

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கோவில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்படும். தமிழக அரசு குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று தூத்துக்குடி சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், பனிமயமாதா ஆலயம் உள்ளிட்டவற்றிலும் பக்தர்களை அனுமதிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் நடந்தது.

தூத்துக்குடி சிவன் கோவிலில் பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. நுழைவு வாயில் அருகே பக்தர்கள் கைகளை சுத்தம் செய்வதற்காக சானிடைசர் வைக்கப்படுகிறது. மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story