சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்கள் சேகரிப்பு


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்கள் சேகரிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 11:15 PM GMT (Updated: 31 Aug 2020 6:47 PM GMT)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை சேகரித்தனர்.

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கினர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த கொலை வழக்கை தற்போது டெல்லி சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜய்குமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

நேற்று காலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் சுக்லா தலைமையில், அழகர்சாமி உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தியபோது, போலீசார் விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸ் நிலைய ஆவணங்களை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, 2 தாசில்தார்களை 24 மணி நேரமும் பணியமர்த்தி போலீஸ் நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உத்தவிட்டார். இந்த உத்தரவு நகல் மற்றும் அப்போது மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு நகல் ஆகிய ஆவணங்களை கேட்டு சி.பி.ஐ. தரப்பில் தபால் அனுப்பி இருந்தனர். அந்த ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று பெற்றுக்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கும் சென்று சில ஆவணங்களை சேகரித்து சென்றனர்.

பின்னர் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உறவினரான மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், சாத்தான்குளம் போலீஸ் ஏட்டு பியூலா செல்வகுமாரியிடமும் விசாரித்தார்கள்.

Next Story