நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் குழந்தைகள் உள்பட 311 பேருக்கு கொரோனா மேலும் 2 பேர் சாவு


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் குழந்தைகள் உள்பட 311 பேருக்கு கொரோனா மேலும் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 31 Aug 2020 10:30 PM GMT (Updated: 31 Aug 2020 8:12 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் குழந்தைகள் உள்பட 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேர் பலியானார்கள்.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 106 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. களக்காடு பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, மானூர் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் 11 ஊழியர்கள் மற்றும் பாப்பாக்குடி, நாங்குநேரி, சேரன்மாதேவி, ராதாபுரம், வள்ளியூர், அம்பை பகுதியை சேர்ந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் வசிக்கும் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் நேற்று கொரோனாவுக்கு பலியானார். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 116 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,248 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 173 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று திருவேங்கடம் பகுதியை சேர்ந்த 4 வயது குழந்தை உள்பட 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 5 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். 969 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 103 பேர் இறந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 111 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 409 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 381 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 916 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 113 பேர் இறந்து உள்ளனர்.

Next Story