ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு


ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 9:51 PM GMT (Updated: 31 Aug 2020 9:51 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகிறது.

ஈரோடு,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள் ளது. இதனால் பொதுமக்கள், வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக கோவில்களில் மக்கள் வழிபடாமல் இருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1,400 பெரிய மற்றும் சிறிய கோவில்கள் உள்ளன. அந்தந்த கோவில்களில் பூசாரிகள் மூலம் கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தது. பின்னர் முதற்கட்டமாக கிராமப்புற கோவில்களில் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள கோவில்களை திறந்து பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 30-ந்ே-தி வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகரில் உள்ள பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், திண்டல் முருகன் கோவில் என அனைத்து கோவில்களையும் சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. மேலும் கோவிலில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், கோவிலில் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கோவிலுக்குள் நுழையும் முன்பு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் நினைவாலயம், புனித அமல அன்னை ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களிலும், மசூதிகளிலும் நேற்று சுத்தப்படுத்தும் பணி நடந்தது.


Next Story