போதை மாத்திரை விற்பனை விவகாரம்: பெங்களூரு போலீசார் முன்பு திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் ஆஜர் - திரை உலகை சேர்ந்த 15 பேரின் பெயர் பட்டியலையும் வழங்கினார்


போதை மாத்திரை விற்பனை விவகாரம்: பெங்களூரு போலீசார் முன்பு திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் ஆஜர் - திரை உலகை சேர்ந்த 15 பேரின் பெயர் பட்டியலையும் வழங்கினார்
x
தினத்தந்தி 31 Aug 2020 11:09 PM GMT (Updated: 31 Aug 2020 11:09 PM GMT)

போதை மாத்திரைகள் விற்பனை விவகாரத்தில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் நேற்று ஆஜரானார். அப்போது போதை பொருட்கள் பயன்படுத்தும் திரைஉலகை சேர்ந்த 15 பேரின் பெயர் பட்டியலையும் அவர் போலீசாரிடம் வழங்கியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக, கடந்த சில தினங்களுக்கு கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து இருந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 145 எம்.டி.எம்.ஏ., 180 எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்து இருந்தனர். கைதான அனிகாவிடம் நடத்திய விசாரணையின் போது அவர் கன்னட திரையுலகினருக்கும் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் கன்னட திரையுலகில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளின் போது போதை பொருட்கள் பயன்பாடு இருப்பதாகவும், இளம் நடிகர்கள், நடிகைகள் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் பெங்களூருவில் சுட்டு கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் சகோதரரும், கன்னட திரைப்பட இயக்குனருமான இந்திரஜித் லங்கேஷ் கூறினார். இது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சமீபத்தில் மரணம் அடைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் குறித்தும், இந்திரஜித் லங்கேஷ் சந்தேகம் எழுப்பினார்.

மேலும் போதை பொருளை கன்னட திரையுலகினர் பயன்படுத்தும் விவகாரம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராகி தனக்கு தெரிந்த தகவலை வழங்குவேன் என்றும் இந்திரஜித் லங்கேஷ் கூறி இருந்தார். இந்த நிலையில் கன்னட திரையுலகினர் போதை பொருட்களை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும்படி இந்திரஜித் லங்கேசுக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தார்கள். அதன்படி நேற்று காலை 11 மணியளவில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராக இந்திரஜித் லங்கேஷ் தனது காரில் வந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் உள்ளே அழைத்து சென்றனர். அப்போது இந்திரஜித் லங்கேஷ் தனது கையில் ஆவணங்கள் அடங்கிய கோப்பு ஒன்றையும் வைத்து இருந்தார்.

இதற்கிடையே தங்கள் முன்பு ஆஜரான இந்திரஜித் லங்கேசிடம், கன்னட திரையுலகினர் போதை பொருட்களை பயன்படுத்துவது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அப்போது அவர் தனக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அவர் கன்னட திரையுலகில் போதை பொருட்களை பயன்படுத்தும் 15 பேரின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது. விசாரணை முடிந்ததும் வெளியே வந்த இந்திரஜித் லங்கேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

கன்னட திரையுலகினர் போதை பொருட்களை பயன்படுத்துவதாக நான் கூறி இருந்தேன். அதன் அடிப்படையில் என்னிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அப்போது எனக்கு தெரிந்த தகவல்களை அவர்களிடம் கூறி உள்ளேன். மேலும் போதை பொருட்களை பயன்படுத்தும் 15 பேரின் பெயர், விவரங்களை கொடுத்து உள்ளேன். நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். போதை பொருட்களை பயன்படுத்தும் கன்னட திரையுலகை சேர்ந்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இதன்மூலம் அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். யார் மீதும் எனக்கு பயம் இல்லை. நான் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறேன்.

யார் மீது பழி போட வேண்டும், குற்றச்சாட்டு கூற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. சிரஞ்சீவி சர்ஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாதது ஏன்? என்று நான் எழுப்பிய கேள்வியை திரும்ப பெற்று கொள்கிறேன். சிரஞ்சீவி சர்ஜா ஒரு இளம் நடிகர். அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவரது மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பார். சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் எனக்கு வேதனை அளிக்கிறது. இறந்தவர்களை பற்றி பேசவும் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story