கூடுதல் ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படலாம்: தனியார் பஸ்களை இயக்க அனுமதி, மராட்டியத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து - புதிய தளர்வுகளை அரசு அறிவித்தது


கூடுதல் ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படலாம்: தனியார் பஸ்களை இயக்க அனுமதி, மராட்டியத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து - புதிய தளர்வுகளை அரசு அறிவித்தது
x
தினத்தந்தி 1 Sep 2020 12:27 AM GMT (Updated: 1 Sep 2020 12:27 AM GMT)

மராட்டியத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படலாம், தனியார் பஸ்களை இயக்க அனுமதி உள்ளிட்ட புதிய தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பிரச்சினை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

எனினும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கடந்த சனிக்கிழமை 4-ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது.

இந்தநிலையில் மராட்டியத்தில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மராட்டியத்திற்குள் பயணம் செய்ய இனிமேல் இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்து உள்ளது. நாளை(புதன்கிழமை) முதல் பொதுமக்கள் எந்த தடையும் இன்றி மாநிலத்துக்குள் சென்று வர முடியும், இதேபோல சரக்குகள் எந்த தடையும் இல்லாமல் மாநிலத்திற்குள் எடுத்து செல்ல முடியும். மாநிலத்திற்குள் ஆட்கள் சென்று வரவோ, சரக்குகளை எடுத்து செல்லவோ எந்தவிதமான முன்அனுமதியோ, ஒப்புலோ அல்லது இ-பாசோ தேவையில்லை என அரசு கூறியுள்ளது.

இதுதவிர ஊரடங்கில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் விவரம் வருமாறு:-

* அத்தியாவசியமில்லாத கடைகள் தொடர்ந்து செல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

* வாடிக்கையாளர்கள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

* அரசு அலுவலகங்களில் ‘ஏ' மற்றும் ‘பி' பிரிவு அதிகாரிகள் 100 சதவீதம் பணிக்கு வரலாம். மும்பை பெருநகரப்பகுதிகள், புனே, பிம்பிரி சிஞ்வட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் மற்ற பிரிவு ஊழியர்கள் 30 சதவீதம் அல்லது குறைந்தப்பட்சம் 30 ஊழியர்கள் என இதில் எது அதிகமோ அதன்படி பணிக்கு வரலாம். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அரசு அலுவலகங்களில் மற்ற பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் பணிக்கு வரலாம்.

இதேபோல தனியார் அலுவலகங்களும் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும். மேலும் அரசு, தனியார் நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதல், நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

* தனியார் பஸ், மினி பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில போக்குரத்து ஆணையர் வெளியிடுவார்.

* எந்தவித நிபந்தனைகளும் இன்றி வெளிப்புற உடற்பயிற்சிகள் அனுமதிக்கப்படுகிறது.

இந்த தளர்வுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ஆனால் மாநிலத்தில் மெட்ரோ ரெயில் சேவை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர், நீச்சல் குளங்கள், மதுபான விடுதிகளை திறக்க தடை தொடருகிறது. இதுதவிர சர்வதேச விமான போக்குவரத்து, சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் இயக்கம் மற்றும் சமூக, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. எனினும் மராட்டிய அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதேபோல மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிட அனுமதி வழங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.

Next Story