காஞ்சீபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாவட்ட எல்லைகள் வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படும் - கோவில்களில் பக்தர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதி


காஞ்சீபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாவட்ட எல்லைகள் வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படும் -  கோவில்களில் பக்தர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதி
x
தினத்தந்தி 1 Sep 2020 1:28 AM GMT (Updated: 1 Sep 2020 1:28 AM GMT)

காஞ்சீபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாவட்ட எல்லைகள் வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றும், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் முறையான பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பல மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரெயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் பொதுபோக்குவரத்து தொடங்கப்படுவதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காஞ்சீபுரம், ஓரிக்கை, உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், கல்பாக்கம், ஆகிய 8 இடங்களில் அரசுபஸ் பணிமனைகள் செயல்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 8 அரசு பஸ் பணிமனைகளிலிருந்து 150 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சி மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், பாலூர், உத்திரமேரூர், ஓச்சேரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகள் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம், மதுராந்தகம், தொழுப்பேடு, கடப்பாக்கம் உள்ளிட்ட மாவட்ட எல்லை பகுதிகள் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

எனவே காஞ்சீபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 8 பணிமனைகளிலிருந்து 150 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப, அரசு பேருந்துகள் கூடுதலாகவும் இயக்கப்பட உள்ளதாக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் ஓரிக்கை பணிமனையில் இருக்கும் பஸ்கள் பொதுமக்கள் சேவைக்காக இன்று இயக்கப்பட உள்ள நிலையில், நீரினால் சுத்தம் செய்யப்பட்டு, பஸ் உள்ளேயும் வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பஸ்களில் தனி மனித இடைவெளியை உறுதிப்படுத்துவதற்காக காஞ்சீபுரம் ஓரிக்கை பணிமனையில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் 50 சதவீதம் பயணிகளுடன் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பஸ்களில் தனிமனித இடைவெளியை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து இருக்கைகளிலும் இடம்விட்டு அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு வரும்போது கண்டக்டர்கள் மட்டும் டிரைவர்களுக்கு முறையான உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கோவில்களில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் இன்று(செவ்வாய்க்கிழமை)முதல் திறந்து பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதையொட்டி, காஞ்சீபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சாமி கோவில், அத்திவரதருக்கு புகழ்பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன் கூறியதாவது:-

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் முறையாக பரிசோதனை செய்யப்படுவார்கள். முக்கிய பிரமுகர்களுக்கான வழியில் வி.ஐ.பி.தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

அதேபோல் காமாட்சியம்மன் கோவிலில் காயத்ரி மண்டபத்தில் இருந்து அம்மனை தரிசிக்க அனுமதி இல்லை. கோவில்களில் பக்தர்கள் அவர்களாகவே விபூதி, குங்குமம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story