பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கலெக்டர் தலைமையில் கூட்டம் - தமிழக அரசு உத்தரவு


பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கலெக்டர் தலைமையில் கூட்டம் - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2020 9:45 PM GMT (Updated: 1 Sep 2020 2:19 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர்மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் நஜிமுதீன் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தேசிய அளவில் பட்டாசு உற்பத்தி அதிகஅளவில் நடைபெறும் நிலையில் இங்குள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்பட்டு ஆண்டுதோறும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க அரசு துறைகளின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் விபத்துகளை தவிர்க்க முடியவில்லை. எனவே மாவட்ட அளவில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு குழு அமைக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

அவரது பரிந்துரையை பரிசீலனை செய்ததில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழு அமைக்க அரசு முடிவு செய்து இருந்தது. கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் இந்த குழுவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர்,மாவட்ட தீயணைப்பு அதிகாரி, சுகாதாரத்துறை இணை இயக்குனர், பட்டாசு உற்பத்தியாளர்கள் அமைப்பான டான்பாமா, டிக்மா ஆகியவற்றின் தலைவர் மற்றும் செயலாளர் உறுப்பினர்களாக இடம்பெறுவர். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குனர் குழுவின் அமைப்பாளராக செயல்படவேண்டும்.

2 மாதங்களுக்கு ஒருமுறை இந்த குழுவின் கூட்டம் நடைபெறவேண்டும். பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசு துறைகளுக்கு இந்த குழு பரிந்துரை செய்யவேண்டும். பட்டாசு ஆலை விபத்துகள் நடந்தால் அதுகுறித்து அறிக்கை பெற்று காரணங்களை ஆய்வு செய்து அதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து பட்டாசு ஆலைகளில் திடீர் சோதனை நடத்தப்படவேண்டும். அனுமதியில்லாமல் கருந்திரி தயாரிப்பது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் பட்டாசு ஆலைகளில் பொருட்களை இருப்பு வைத்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்ட வருவாய் அதிகாரி உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பட்டாசு ஆலைகளுக்கு கந்தகம் கொள்முதல் செய்வதற்கான உரிமம் வழங்க மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அனுமதி வழங்கவேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் ஆலைகள் மீது உரிமங்கள் தற்காலிக ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்யவேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தவிர்ப்பதற்கான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் இந்த குழு தலைவரான கலெக்டருக்கு குழுகூட்டம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு குழுவின் முதல் கூட்டம் கலெக்டர் கண்ணன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய்அதிகாரி மங்களராமசுப்பிரமணியம், வெடிபொருள் கட்டுபாட்டுதுறை துணை இயக்குனர் சுந்தரேசன், தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் பிரேமகுமாரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அரசு உத்தரவுப்படி பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Next Story