அ.தி.மு.க. ஆட்சியில் நிறை, குறை உள்ளன: “பூனைக்கு தே.மு.தி.க.தான் மணிகட்டப் போகிறது” - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


அ.தி.மு.க. ஆட்சியில் நிறை, குறை உள்ளன: “பூனைக்கு தே.மு.தி.க.தான் மணிகட்டப் போகிறது” - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 1 Sept 2020 3:45 AM IST (Updated: 1 Sept 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

“அ.தி.மு.க. ஆட்சியில் நிறை, குறை உள்ளன. பூனைக்கு தே.மு.தி.க.தான் மணிகட்டப் போகிறது” என பரமக்குடியில் அளித்த பேட்டியில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்பு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் களப்பணி ஆற்றி வருகின்றனர். வருகிற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதுகுறித்து பொதுக்குழு, செயற்குழு, கூட்டம் கூடி வருகிற ஜனவரி முதல் வாரத்தில் விஜயகாந்த் தனது முடிவை அறிவிப்பார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். தே.மு.தி.க.வினர் தேர்தல் களத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார்கள். தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் தான் தே.மு.தி.க. உள்ளது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஜனவரி முதல் வாரத்தில் விஜயகாந்த் புதிய கூட்டணி குறித்து நல்ல முடிவை அறிவிப்பார்.

கட்சியினர் அனைவரும் அவர்தான் ‘கிங்’ ஆக இருக்க வேண்டும் என கூறுகின்றனர். தே.மு.தி.க. தனித்து களம் காணவேண்டும் என தொண்டர்களும் உறுதியாக உள்ளனர். ஜெயலலிதா- கருணாநிதி என்ற மிகப் பெரிய ஆளுமை இல்லாததால் வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்கவும் முடியாது.

அதனால் தான் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க விரும்புகிறோம். 2021 சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும் தேர்தலாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தலாகவும், தமிழக மக்களுக்கான தேர்தலாகவும் அமையும். தி.மு.க -அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைக்கின்றன. தே.மு.தி.க. இல்லாமல் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை. இதுவரை யாரோடும் நாங்கள் கூட்டணி குறித்து பேசவில்லை. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அரசியல் வேண்டும் என அனைவரும் சொல்கின்றனர். மாற்று அரசியல் வேண்டும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது? அதை தே.மு.தி.க. தான் செய்யப்போகிறது. மக்கள் தற்போது நன்றாக புரிந்து உள்ளனர். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியை நிறைகளும், குறைகளும் இருக்கும் ஆட்சியாகவே பார்க்கிறோம். மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும். அவர்கள் அறிவிக்கும் அளவிற்கு செயல்பாடுகள் இல்லை. வேகமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விஜயபிரபாகரன், தே.மு.தி.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story