காவேரிப்பாக்கம் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி
காவேரிப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவருடன் சென்ற பெண் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்,
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவரது மனைவி ஈஸ்வரி (51). இவர்கள் 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள மகள் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பெரிய கிராமம் சந்திப்பில் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் ஈஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கணவர் கிருஷ்ணன் லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கு காரணமான வாகனத்தையும், அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story