குமரி மாவட்டத்தில் 520 பஸ்கள் இயக்கம்: வடசேரியில் பஸ் நிலையத்தின் வெளியில் இருந்து இயக்கப்படுகிறது
குமரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 520 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. வடசேரி பஸ் நிலையத்தில் சந்தை செயல்படுவதால், பஸ்களை வெளியில் இருந்து இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டது. அதில் ஒன்றாக பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டத்துக்குள் பொது போக்குவரத்து சேவையான அரசு பஸ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 760 பஸ்களில் 520 பஸ்களை மாவட்டத்துக்குள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாகர்கோவில் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் சில சாலைகளில் ஒருபுறம் மட்டுமே பஸ் உள்ளிட்ட வாகனங்களை இயக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இருப்பினும் அரசு உத்தரவின்பேரில் இன்று முதல் அரசு பஸ்களை மாவட்டத்திற்குள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து மார்த்தாண்டம், குலசேகரம், பேச்சிப்பாறை, தேங்காப்பட்டணம் போன்ற புறநகர் பஸ்களையும், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், சாமிதோப்பு, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மற்ற பஸ்கள் அனைத்தையும் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்க அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை தலைமையில் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் நிற்கும் இடம், பயணிகள் இருக்கைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்களையும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது.
கடந்த 2 மாதங்களுக்குப்பிறகு குமரி மாவட்டத்தில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 13 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளிலும் பஸ்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, தயார் நிலையில் வைக்கும் பணி நேற்று நடந்தது. இன்று அதிகாலை 5 மணி முதல் மாவட்டப்பகுதிகளில் பஸ்கள் ஓடத்தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தனி போக்குவரத்து வசதி இல்லாத மக்களும் பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Related Tags :
Next Story