கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்த முன்னுரிமை - கர்நாடக அரசு முடிவு
கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்த முன்னுரிமை அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினசரி சுமார் 9 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் தினசரி மரணம் அடைகிறவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் மட்டும் தினமும் சராசரியாக 3 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் பாதிப்பு அதிகரித்து வருவதால், மாதிரிகளின் பரிசோதனை முடிவு கிடைக்க அதிகபட்சமாக ஒரு வாரம் ஆகிறது.
இதனால் நோய் அறிகுறி உள்ளவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மேலும் லேசான பாதிப்பு இருப்பவர்கள், மாதிரியை பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு வெளியில் நடமாடுகிறார்கள். அவர்கள் மூலம் வைரஸ் பல பேருக்கு பரவக்கூடிய நிலை உள்ளது. பரிசோதனை முடிவு வெளிவர தாமதமாவதால் தான் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் பெங்களூருவில் நோய் அறிகுறி உள்ளவர்களின் மாதிரி பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி இயக்குனரும், மாநில அரசின் கொரோனா பரிசோதனை கூடங்கள் மற்றும் பரிசோதனை குறித்த கண்காணிப்பு அதிகாரியுமான டாக்டர் மஞ்சுநாத் கூறியதாவது:-
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் வெளிவர தாமதமாகிறது. இதன் காரணமாக நோய் அறிகுறி உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தகவல் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் நோய் அறிகுறி உள்ளவர்களின் மாதிரி பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அவர்கள் விரைவாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க முடியும். கர்நாடகத்தில் தினமும் 70 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் தற்போது 110 கொரோனா ஆய்வகங்கள் செயல்படுகின்றன.
இவ்வாறு மஞ்சுநாத் கூறினார்.
Related Tags :
Next Story