ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Sep 2020 4:48 PM GMT (Updated: 1 Sep 2020 4:48 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 2 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது. நேற்று புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 177 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பி.பி.அக்ரஹாரம், ஆர்.என்.புதூர், நாடார்மேடு, ஆசிரியர் காலனி, இந்திராநகர், மொசுவண்ணவீதி, வீரப்பன்சத்திரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, கச்சேரிவீதி, திண்டல், மூலப்பாளையம், மாமரத்துப்பாளையம், செட்டிபாளையம், சூரம்பட்டி, குமலன்குட்டை, கொல்லம்பாளையம், முத்துக்குமாரசாமி வீதி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, கள்ளுக்கடைமேடு, மரப்பாலம், பெரியசேமூர், இடையன்காட்டுவலசு, வாய்க்கால்வீதி, கிருஷ்ணம்பாளையம், நாராயணவலசு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

2 பேர் பலி

நேற்று ஒரே நாளில் 138 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 1,860 பேர் குணமடைந்து உள்ளனர். 1,275 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே மாவட்டத்தில் 40 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில், மேலும் 2 முதியவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த 79 வயது முதியவரும், ஆர்.என்.புதூரை சேர்ந்த 63 வயது முதியவரும் கொரோனா தொற்று காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.

கைதிகள்

இதற்கிடையே ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய முதலாம் பகுதியில் இரும்புக்கம்பிகளை திருடியதாக ஈரோடு கிராமடை வீதியை சேர்ந்த 27 வயது வாலிபரை பொதுமக்கள் பிடித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரை கைது செய்த போலீசார், ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 28-ந் தேதி ஈரோடு கிளைச்சிறையில் அடைத்தனர். அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சுகாதார பணிகள்

இதேபோல் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா உறுதியானது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், ஈரோடு கிளைச்சிறை மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்குள் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story