கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் திறப்பு 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி


கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் திறப்பு 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 1 Sep 2020 9:50 PM GMT (Updated: 1 Sep 2020 9:50 PM GMT)

கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் நேற்று திறக்கப்பட்டன. 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

பெங்களூரு,

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கர்நாடகத்தில் மதுக்கடைகள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாநில அரசு மூட உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை செய்த கர்நாடக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. மதுக்கடைகள் திறந்து இருந்த போது மதுபானங்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறைந்தது.

இதனால் கர்நாடகத்தில் மீண்டும் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை திறக்க கலால்துறை முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. மேலும் கலால்துறை மந்திரி நாகேசும், செப்டம்பர் 1-ந் தேதி(நேற்று) முதல் கர்நாடகத்தில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை திறப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பேசுவதாக கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகத்தில் 4-வது கட்ட ஊரடங்கு தளர்வை அமல்படுத்துவது குறித்து எடியூரப்பா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.

பார்கள் திறப்பு

அப்போது மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை திறப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை திறக்க சில வழிகாட்டுதல்களுடன் அரசு அனுமதி அளித்து இருந்தது. அதன்படி 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மாநிலத்தில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா ஓட்டல்கள் திறக்கப்பட்டன. ஆனால் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே பார்களில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மதுபான பார்களில் அனுமதிக்கப்படவில்லை.

மதுபான விடுதிகளில் வாடிக்கையாளர்கள் அமர 6 அடி இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தே மதுபாட்டில்களை விற்பனை செய்தனர். ஊழியர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து இருந்தனர். மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளதால் கலால்துறைக்கு இனி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மதுபான பார்கள் திறக்கப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Next Story