கர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு மண்டல சட்டம் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேச்சு


கர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு மண்டல சட்டம் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேச்சு
x
தினத்தந்தி 1 Sep 2020 9:54 PM GMT (Updated: 1 Sep 2020 9:54 PM GMT)

கர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு மண்டல சட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.

கலபுரகி,

கர்நாடகத்தில் ஐதராபாத்-கர்நாடக பகுதி தொழில் வர்த்தக சபை சார்பில் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் தற்போது தொழில் வளர்ச்சி என்பது பெங்களூருவை மையப்படுத்தியே உள்ளது. மாநில அரசு, இந்த தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வளர்ச்சியை மாநிலத்தின் 2, 3-ம் நிலை நகரங்களுக்கு பகிர்ந்தளிக்கவும் விரும்புகிறது. இதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் சிறப்பு முதலீடு மண்டல சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இத்தகைய சட்டம் குஜராத்தில் அமலில் உள்ளது.

முதலீட்டாளர்கள் பாராட்டினர்

இந்த சட்டத்தின் மூலம் தார்வார், கலபுரகி, சிவமொக்கா மண்டலத்தில் தொழில் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். விவசாய நிலத்தை தொழில் முதலீட்டுக்கு பயன்படுத்தும் வகையில் நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது வேகமான தொழில் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும்.

தாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் நான் கலந்து கொண்டேன். கர்நாடகம் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக இருப்பதாக முதலீட்டாளர்கள் பாராட்டினர். ஆனால் முதலீட்டுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் சிக்கல் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். அந்த சிக்கலை தீர்க்கவே நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நிலத்தின் மதிப்பு கூடும்

இந்த திருத்தம் மூலம் விவசாயிகள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் என இருதரப்பினரும் பயன் பெறுவார்கள். மேலும் விவசாய நிலத்தின் மதிப்பும் கூடும். இது சட்ட திருத்தம் விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Next Story