காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக இளம்பெண் புகார்: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில், வலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த ஓரடிஅம்பலத்தை சேர்ந்தவர். விவேக் ரவிராஜ். இவர் தற்போது நாகையை அடுத்த வலிவலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு மணல்மேடு போலீஸ் நிலையத்தில் இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுபஸ்ரீ(வயது 25) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இதையடுத்து இவர்கள் இருவரும் நேரில் சந்தித்து பேசினர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகியதில் சுபஸ்ரீ கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து விவேக் ரவிராஜ், கருவை கலைக்க கூறி கட்டாயப்படுத்தியபோது அதற்கு சுபஸ்ரீ உடன்படவில்லை.
இதனால் விவேக் ரவிராஜ் தனது தாய் ராஜாத்தியை அழைத்து வந்து கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தி உள்ளார். அப்போது ராஜாத்தி, கருவை கலைத்தால்தான் தனது மகன் உன்னை திருமனம் செய்து கொள்வான் என சுபஸ்ரீயிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து சுபஸ்ரீ தனது கருவை கலைந்துள்ளார். அதன்பிறகு சுபஸ்ரீயுடன் விவேக் ரவிராஜ் பழகுவதை தவிர்த்து வந்தார். மேலும் சுபஸ்ரீயை தகாதவார்த்தைகளால் திட்டி, திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சுபஸ்ரீ போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் விவேக் ரவிராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே சுபஸ்ரீ மற்றும் விவேக் ரவிராஜுடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் விவேக் ரவிராஜ் சுபஸ்ரீயை மிரட்டும் ஆடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சுபஸ்ரீ, விவேக் ரவிராஜ் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் மற்றும் அவரது தாய் ராஜாத்தி ஆகியோர் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஸ் குமார் மீனா, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story