போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை உறவினர்கள் போராட்டம்


போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Sep 2020 11:13 PM GMT (Updated: 1 Sep 2020 11:13 PM GMT)

போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஆட்டோ டிரைவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தாக்கியதால்தான் அவர் தற்கொலை செய்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 50). ஆட்டோ டிரைவர். இவரது உறவினரான சிவகுமார் என்பவரை பல்வேறு வழக்குகளில் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டின் மாடியில் சிவகுமார் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜேந்திரன் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் சிவகுமார் அங்கு இல்லை.

இதனால் ராஜேந்திரனை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். 3 மணிநேர விசாரணைக்கு பிறகு, சிவகுமார் வந்தால் போலீசாருக்கு தகவல் தரவேண்டும் என்று எழுதி வாங்கி கொண்டு அவரை அனுப்பியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் மாலையில் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு குடிபோதையில் வந்த ராஜேந்திரன், எந்த தவறும் செய்யாத என்னை ஏன் அடித்தீர்கள்? என்று கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

விசாரணையின்போது அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேந்திரன், அதன்பிறகு தனது வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உறவினர்கள் போராட்டம்

இது பற்றி தகவல் அறிந்ததும் கண்ணகிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ராஜேந்திரனின் குடும்பத்தினர், போலீசார் தாக்கியதால்தான் ராஜேந்திரன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் அதிகாரிகள், ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமரசம் செய்து வைத்தனர். பின்னர் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் மறுப்பு

போலீஸ் தரப்பிலோ, ராஜேந்திரனின் சகோதரர், சகோதரிகள் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீசார் மீது வீண்பழி போடுவதாக கூறப்பட்டது.

ஆனால் போலீசார் தாக்கியதால்தான் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாகவும், 3 பெண் குழந்தையுடன் தவிக்கும் அவரது மனைவிக்கு அரசு உதவிட வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

Next Story