அறந்தாங்கி அருகே பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து மாமியார்-மருமகள் பலி
அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மாமியார்-மருமகள் பலியானார்கள்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆளப்பிறந்தான் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். டெய்லரான இவருக்கு ராதிகா (வயது 37) என்ற மனைவியும், கவின் (8), கபீர் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அறந்தாங்கி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதேபோல் மகாதேவன் வீட்டில் உள்ள மின் வயரும் அறுந்து குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரில் விழுந்து கிடந்துள்ளது. இதையாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையில் நேற்று காலையில் ராதிகா தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிக்கு சென்றார். அப்போது, மின்வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் தண்ணீரை தொட்டதும் ராதிகாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அலறித்துடித்த அவரது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த மாமியார் ராஜகோகிலம், மருமகள் ராதிகாவை பிடித்தார். உடனே அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதை அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து மெயின் சுவிட்சை அணைத்து மின்சாரத்தை துண்டித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரும், மருமகளும் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story