செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதி


செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 Sept 2020 5:01 AM IST (Updated: 2 Sept 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

வண்டலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னை பிராட்வே, பூந்தமல்லி, ஆவடி, தி.நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பஸ்கள் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் வரை இயக்கப்பட்டன.

இதே போல் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, திருப்போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, தாம்பரம், பல்லாவரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்திற்குள் பஸ் போக்கவரத்து தொடங்கியது. பெரும்பாலான பஸ்களில் 5 அல்லது 6 பயணிகள் மட்டுமே பயணம் செய்ததால் பஸ்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

2 பஸ்களை பிடித்து

செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே செல்வதற்கு பொதுமக்கள் 2 பஸ்களை பிடித்து சென்றனர். உதாரணமாக செங்கல்பட்டு மாவட்டமான மீனம்பாக்கம், பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட எல்லையான தொழுப்பேடு வரை செல்ல வேண்டுமென்றால் மீனம்பாக்கத்தில் இருந்து மாநகர பஸ்சில் கூடுவாஞ்சேரிக்கு செல்ல வேண்டும், பின்னர் கூடுவாஞ்சேரியில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்களில் ஏறி செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், தொழுப்பேடு அச்சரப்பாக்கம் உள்ளிட்ட இடங் களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வேலை இல்லாமல் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் ஒரே மாவட்டத்திற்குள் பஸ்சில் செல்வதற்கு 2 பஸ்கள் பிடித்து 2 கட்டணம் செலுத்தி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட எல்லை வரை செல்லும் தமிழ்நாடு போக்குவரத்து கழக பஸ்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்வதை காண முடிந்தது.

தற்போது கொரோனா கால கட்டத்தில் ஒரு பஸ்சில் 22 முதல் 24 பயணிகள் வரை மட்டுமே பயணிக்க வேண்டும். ஒரு இருக்கைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுகள் இருந்தும் கிராமபுற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் பொதுமக்கள் இதனை கடைபிடிக்கவில்லை. பஸ்களில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் முககவசம் அணியாமல் சென்றனர். மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

போக்குவரத்து நெரிசல்.

இதற்கிடையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் நேற்று அதிகாலை முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இதனால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் உயிரியில் பூங்கா போன்ற இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.

வாகன ஒட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

Next Story