குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Sept 2020 5:15 AM IST (Updated: 2 Sept 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

நெல்லை,

தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனர் தலைவர் கண்ணபிரான் பாண்டியன் தலைமையில் தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளம் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் நேற்று பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அங்கு குடிநீர் கேட்டும், அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதை தொடர்ந்து கண்ணபிரான் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

பாளையங்கோட்டை யூனியன் ராமையன்பட்டி பஞ்சாயத்து சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் 8-வது வார்டு பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அவதிப்படுகிறோம். குடிநீர், சாலை, வாறுகால் வசதி சமுதாய நலக்கூடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்தவசதிகளும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து 8-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதில் ஆழ்துளை கிணறு தண்ணீர் மற்றும் ஆற்று தண்ணீர் இரண்டையும் ஒரே தொட்டியில் ஏற்றி அந்த நீர் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடிநீர் வினியோகமும் நிறுத்தப்பட்டது. இதனால் நீண்ட தூரம் சென்றுதான் குடிநீர் பிடித்து வருகிறோம். தாமிரபரணி ஆறு அருகில் இருந்தும் கூட குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவது வேதனையாக உள்ளது. எனவே எங்கள் வார்டு பகுதிக்கு நேரடியாகவும், தட்டுப்பாடு இன்றியும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story