நெல்லை, தூத்துக்குடியில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தென்காசியில் 49 பேருக்கு பாதிப்பு


நெல்லை, தூத்துக்குடியில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தென்காசியில் 49 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 2 Sept 2020 5:21 AM IST (Updated: 2 Sept 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தென்காசியில் 49 பேர் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஆயுதப்படை போலீஸ்காரர், மின்சார வாரிய ஊழியர்கள் உள்பட 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பணியாற்றிய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரம் போலீஸ் குடியிருப்பு, சேர்வலாறு மின்சார வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி அங்கு சுகாதார துறையினர் முகாமிட்டு கிருமிநாசனி தெளித்தனர்.

கொரோனா தொற்று பாபநாசம் மலைப்பகுதியில் உள்ளவர்களுக்கு வந்ததையொட்டி மலைப்பகுதிக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. சங்கர்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 2 முதியவர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

9,688 பேர் பாதிப்பு

நெல்லை மாநகர பகுதியில் பாளையங்கோட்டை நேசநாயனார் தெரு, தியாகராஜநகர், மேலப்பாளையம் கருங்குளம், நெல்லை டவுன் வேம்பு தெரு, புதுப்பேட்டை தெரு, போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர்கள் 9 பேர், சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர்கள் 9 பேர், களக்காடு பகுதியை சேர்ந்தவர் 6 பேர், மானூர் பகுதியை சேர்ந்தவர்கள் 11 பேர், ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேர், வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் 9 பேர், அம்பை பகுதியை சேர்ந்தவர்கள் 17 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 18 பேர் என மொத்தம் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 688-ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 265 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,248 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 175 பேர் இறந்து உள்ளனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள் உள்பட 49 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒருவர் இறந்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 465 ஆகும். இதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 4 ஆயிரத்து 425 பேர். 936 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 104 பேர் இறந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று, சமீப காலமாக குறைந்து காணப்படுகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 475-ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 478 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 884 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story