அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன


அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன
x
தினத்தந்தி 2 Sept 2020 6:19 AM IST (Updated: 2 Sept 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.

ஈரோடு,

அந்தியூர், ஆப்பக்கூடல், கீழ்வாணி, சென்னிமலைகவுண்டன்புதூர், கூத்தம்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் வாழைகளை பயிரிட்டு உள்ளனர். தற்போது வாழைகள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன.

மழை அளவு

இதே போல் ஈரோட்டில் பெய்த மழையால் வ.உ.சி. பூங்கா தற்காலிக மார்க்கெட் நேற்று சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதேபோல் நேற்று பவானி, கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், சென்னிமலை, அம்மாபேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பவானி -54, கொடுமுடி -51.8, கவுந்தப்பாடி -41.2, ஈரோடு -30, எலந்தைகுட்டை மேடு -30.6, வரட்டுப்பள்ளம் -28.4, சென்னிமலை -23, அம்மாபேட்டை -22.6, மொடக்குறிச்சி -21, கோபி -15, பெருந்துறை -10.2, தாளவாடி -9.2, குண்டேரிப்பள்ளம் -8.6, நம்பியூர்- 7, சத்தியமங்கலம் -4, கொடிவேரி -3.4, பவானிசாகர் -2.6. மாவட்டம் முழுவதும் 362.6 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 21.3 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

Next Story