ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், உச்சிப்பிள்ளையார் கோவில்களில் - 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், உச்சிப்பிள்ளையார் கோவில்களில் - 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Sep 2020 9:30 PM GMT (Updated: 2 Sep 2020 1:06 AM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகியவற்றில் 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம், 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கிராமப்புறங்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வருமானம் ஈட்டக்கூடிய கோவில்கள் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டன. ஆனால், பெரிய கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கில் பெரிய அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அவை நேற்று முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, அதிக வருமானம் தரக்கூடிய பிரசித்தி பெற்ற இந்து கோவில்கள் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையில் நின்று செல்லும் வகையில் ரெங்கா... ரெங்கா... கோபுரம் பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. நுழைவு வாயிலில் கிருமிநாசினி தெளிப்பு அரங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்பநிலையை அளவிட ‘தெர்மல் ஸ்கேனர்‘ கருவி பயன்படுத்தப்பட்டது.

ரெங்கநாதரை வழிபட செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை 300 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பல வண்ண டோக்கன்கள் பயன்படுத்தப்பட்டு, அவை இத்தனை மணியில் இருந்து இத்தனை மணிவரைக்கும் என டோக்கனில் குறிக்கப்பட்டிருந்தது.

கோவிலுக்குள் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுவாமி தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்களை கோவில் வளாகத்தில் அமர்வதற்கு அனுமதிக்கவும் இல்லை.

இதுபோல் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாகவாசனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன.

முன்னதாக கோவிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் மற்றும் பக்தர்கள் நின்று செல்லும் வரிசை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று செல்ல வசதியாக வட்ட வடிவில் குறியீடு வரையப்பட்டு இருந்தது.

அத்துடன் பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கு முன்பாக, காலணிகளை அவர்களே சுயமாக கழட்டி ஓரிடத்தில் வைத்து செல்லவும், கை, கால்களை சுத்தம் செய்து கொள்வதற்காக தண்ணீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

மேலும் கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பலர் கடந்த 5 மாதமாக நிறைவேற்ற முடியாத வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு முடிகாணிக்கை செலுத்தினர். பலர் கோவில் முன் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

இதுபோல் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவில்களில் தினசரி நடைபெறும் இரண்டு கால பூஜைகள் நேற்று காலை வழக்கம் போல தொடங்கியது. இந்த பூஜையில் பக்தர்கள் கட்டுப்பாடுடன் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமான சுவாமி கோவிலில் தினசரி நடைபெறும் ஆறுகால பூஜைகள் நேற்று வழக்கம் போல் நடைபெற்றது. இதில் பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. அதிகமான பக் தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைவான பக்தர்களே வந்தனர்.

Next Story