ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2020 10:15 PM GMT (Updated: 2 Sep 2020 1:37 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள போதும், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அரசு பல்வேறு தளர்வுகளை நேற்று முதல் அமுல்படுத்தியுள்ளது. இ-பாஸ் நடைமுறை ரத்து, மாவட்டத்திற்குள் பஸ் செல்ல அனுமதி, பெரிய கோவில்கள் திறப்பு என பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பஸ்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 16 பஸ்கள் எங்கிருந்து எங்கு வரை இயங்கும் என தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்துடன் பஸ் நிலையங்களில் காத்திருந்தனர். ஒரு சில பகுதிகளில் பலமணி நேரம் காத்திருந்தும் பஸ் வராததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மிக, மிக குறைந்த அளவு பஸ்களே மாவட்ட அளவில் இயக்கப்பட்டதால், இயங்கிய சில பஸ்களிலும் போதுமான அளவு பயணிகள் இல்லாமல் இருந்தது. எந்த இடத்தில் எந்த பஸ் புறப்பட்டு, எந்த வழியாக எந்த இடத்திற்கு செல்லும் என தெளிவாக தெரியாததால், பஸ்சில் பயணிக்க நினைத்தவர்கள் தங்கள் பயணத்தை வகுக்க முடியாமல் திண்டாடினர்.

இ-பாஸ் முறையை தளர்த்தி விட்டதால், சமூக இடைவெளியுடன் பயணம் செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தடங்களுக்கும், முக்கியமாக கிராமங்களில் இருந்து நகர்புறங்களை நோக்கி சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு திரும்பி வருவதற்கும், பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story