கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் சாவு - விழுப்புரத்தில் 166 பேருக்கு தொற்று


கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் சாவு - விழுப்புரத்தில் 166 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 1 Sep 2020 9:45 PM GMT (Updated: 2 Sep 2020 2:20 AM GMT)

கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 166 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 6,083 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 5,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 73 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் மற்றும் லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்த 72 வயது முதியவர் மற்றும் சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 1,973 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்பட 205 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,288 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7,429 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 67 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 6,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 990 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 600-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 166 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற ஊழியர், கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி ஆய்வக உதவியாளர், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,595 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 97 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,049 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story